‘புதுப்பேட்டை 2’ பற்றி தனுஷ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் செல்வராகவன் வாழ்வில் அவர் பேர் சொல்லும் படங்களில் ஒன்று ‘புதுப்பேட்டை’. தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்றும் பிடித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று செல்வராகவனுக்குக் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் தனுஷிற்கும் இதே கோரிக்கையை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டிருந்த தனுஷிடம் ஒரு ரசிகர் ‘’புதுப்பேட்டை 2 வருமா…?’’ என்று கேட்க, அதற்கு தனுஷ் ,
‘’புதுப்பேட்டை எனக்கு விருப்பமான திரைப்படங்களில் ஒன்று. அது என் இதயத்துக்கு நெருக்கமானதும் கூட. அந்தப் படம்தான் என்னை ஒரு நடிகனாக முன்னேற்றிய படம். அதுவும் என் அண்ணன் செல்வராகவன் இல்லாமல் நடந்திருக்காது. காலத்தைக் கடந்து நிற்கும் வெற்றிப் படம் அது. ஹாலிவுட்டில் முதன் முதலாக என் படம் ஒன்று விமர்சனம் செய்யப்பட்டதென்றால் அது ‘புதுப்பேட்டை‘ தான். அதன் இரண்டாம் பாகக் கதையை உருவாக்குவது மிகப்பெரிய சவால் நிரம்பியதும், இமாலய இலக்குமாகும். ஏனெனில் கொக்கி குமாரின் புதிய வாழ்க்கையை அது கையாள வேண்டும்.
ரசிகர்கள் ‘புதுப்பேட்டை‘ மூலம் பெற்றுள்ள எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். அது போலவே இரண்டாம் பாகமும் சம அளவில் சிறப்பாக அமைய வேண்டும் அல்லது அதற்கும் கூடுதலாக சிறப்பாக அமைய வெண்டும், பார்ப்போம், எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறது என்று’’ என்று பதிலளித்தார்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.